Monday 30 April 2012

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு....... "வெரைட்டி ரைஸ்" வழங்குவது பற்றி கருத்து கேட்பு



தொடர் கல்வியை ஊக்கப்படுத்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கவும், "வெரைட்டி ரைஸ்" வழங்கினால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவரா என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாநில அளவில், 40 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு தலா, 100 கிராம் அரிசி, எண்ணெய் மற்றும் காய்கறிக்கு, 80 பைசா வழங்கப்படுகிறது. ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., படிப்போருக்கு தலா, 150 கிராம் அரிசி, எண்ணெய், காய்கறிக்கு, 80 காசு, 39 காசு விறகுக்கு வழங்கப்படுகிறது.

வரும் கல்வியாண்டு முதல் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கலாமா? என அரசு ஆலோசித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மேல்நிலை பயிலும் மாணவர் எண்ணிக்கை, அவர்களில் எத்தனை பேர் வெளியூரில் இருந்து வருகின்றனர்; பெற்றோர் வேலைக்கு செல்வதால் மதிய உணவு எடுத்து வர முடியாத நிலையிலும், வறுமையான நிலையிலும் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விபரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மூலம் சேகரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் குறைவான மாணவர்கள் சத்துணவு சாப்பிட வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அரிசி, எரிபொருள், எண்ணெய் உட்பட பிற செலவுகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும் என கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அதுபோல, சத்துணவில் வாரத்துக்கு ஐந்து நாட்கள் முட்டை அல்லது, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு பழம், ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசிப்பயறு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை சத்துணவுடன் வழங்கப்படுகிறது. சாதத்துடன், சாம்பார், பருப்பு போன்றவை தினமும் வைக்கப்படுவதால், குழந்தைகள் அதை விரும்பி உண்ணவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதை மாற்றி, தினமும் தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, காய்கறி கலந்த உணவு, சாம்பார் சாதம், பருப்பு சாதம் என ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு அரிசி தவிர, மூன்று ரூபாய் செலவீட்டில், "வெரைட்டி ரைஸ்' வழங்கினால், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். வீணாகாது, என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

"பள்ளி குழந்தைகளுக்கு இரண்டு செட் சீருடை, இலவச பாடப்புத்தகம், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், உதவித்தொகை போன்றவை வழங்கப்படுவதால், மாணவ, மாணவியரும், பெற்றோரும் உற்சாகமடைந்துள்ளனர். அதேநேரம், மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவு வழங்கி, அனைவருக்கும், "வெரைட்டி ரைஸ்' வழங்கினால், கூடுதல் வரவேற்பு கிடைக்கும், என அரசு எதிர்பார்க்கிறது. விரைவில் அறிவிப்பு வரும்' என, சத்துணவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...