Tuesday 2 July 2019

மனிதனின் ஆயுள் காலத்தை அதிகரிக்கும் ரகசியம்!!!

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தி வரும் இந்த நவீன காலத்திலும் மனிதன் 100 ஆண்டுகள் வாழ்வது குதிரைக்கொம்பாக இருக்கிறது. இருப்பினும், தன் ஆயுள் காலத்தை அதிகரிக்கும் பல ஆய்வுகளில் மனிதன் பல நூறு ஆண்டுகள் முயற்சி செய்து வருகிறான்.


வட துருவத்தில் உள்ள உறைந்த நீர்நிலைகளின் ஆழத்தில் வாழக்கூடிய கிரீன்லாந்து சுறா(Greenland shark) 400 வருடங்களுக்கு மேல் வாழக் கூடியது என்று கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே நீண்டகாலம் வாழக்கூடிய முதுகெலும்பு விலங்காக கருதப்படும் கிரீன்லாந்து சுறாவில், மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க கூடிய ரகசியங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினார்கள்.

இதுகுறித்து டென்மார்க், இங்கிலாந்து மற்றும் இதர உலக நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுறாவின் ஆயுட்காலம் தொடர்பான பல ஆய்வுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

முக்கியமாக, மனிதர்களின் வயது முதிர்ச்சியுடன் தொடர்புடைய புற்றுநோய் இதய நோய்கள் மற்றும் இதர நோய்களை இந்த சுறா எப்படி தவிர்க்கிறது என்பதையும் கண்டறிய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

கிரீன்லாந்து சுறாக்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீட்டருக்குக் கீழே 29 டிகிரி ஃபாரன்ஹீட் (அதாவது மைனஸ் 1.66 டிகிரி செல்சியஸ்)  உறை வெப்பநிலையில் வாழக்கூடியவை மிகவும் குளிர்ச்சியான இந்த வெப்பநிலை உடலின் வளர்சிதை மாற்றங்கள் மற்றும் முதிர்ச்சி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாக, இந்த சுறாக்கள் 150 வயது வரை முதிர்ச்சி அடையாமல் இளம் பருவத்திலேயே இருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக மனிதர்களும் தண்ணீருக்கடியில் உரை வெப்பநிலையில் வாழ வேண்டுமா??? என்றால் இல்லை. மாறாக, இந்த சுறாவின் நீண்ட ஆயுள் காலத்துக்கு அதன் இதயம்-வெள்ளை ரத்த அணுக்களே இல்லாத வினோதமான நோய் எதிர்ப்பு சக்தி அதற்கு அடிப்படையான பிரத்தியேகமான சில மரபணு மாற்றங்கள் போன்றவை காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உதாரணமாக இந்த சுறாவின் இதயம் சுமார் 12 வினாடிக்கு ஒருமுறை தான் துடிக்கிறது ஆனாலும் பல நூற்றாண்டுகளுக்கு பழுதுபடாமல் துடிக்கிறது மாறாக மனித இதயமானது ஒரு நொடிக்கு ஒரு முறை துடிக்கிறது இதன் காரணமாக இதய நோய்கள் ஏற்பட்டு இறப்பு அல்லது ஆயுட்கால குறைப்பு நேர்கிறது என்கிறார் விஞ்ஞானி ஹாலி ஷியல்ஸ். இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹாலி ஷியல்ஸ் கிரீன்லாந்து சுறாவின் இதய செயல்பாட்டை ஆய்வு செய்து இதை கண்டுபிடித்துள்ளார்.

தற்போது டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து இந்த சுறாக்களின் இதயங்களை எம்ஆர்ஐ ஸ்கேன் புரதங்களை கண்டறியும் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்(Mass Spectrometer) உள்ளிட்ட இதர பல தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

இத்தகைய ஆய்வுகளின் மூலம் கிரீன்லாந்து சுறாக்களை நிறைய அமைப்பு மற்றும் செயல்பாடு, மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு காரணமான பிரத்தியேகமான மரபணு மாற்றங்கள் ஆகியவை தொடர்பான தகவல்களை கண்டறிந்து, அவற்றின் உதவியுடன் மனித இதய செயல்பாடுகளை மேம்படுத்தவும் ஆயுள் காலத்தை அதிகரிக்கவும் முடியும் என்று நம்புகிறது ஹாலி உள்ளிட்ட சர்வதேச ஆய்வுக் குழு.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...